தமிழகத்தில், தற்போது 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51, 954 பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47,407 பேர் தங்கள் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது, சர்க்கரை 1 கிலோ, ரூ. 13.50, கோதுமை ரூ.7.50, மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 13.60 – 14.20, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு கிலோ ரூ. 30.00, பாமாயில் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழக வேளாண்மை பட்ஜெட்டில் விவசாயிகளின் பல கோரிக்கைகள் இடம்பெறாமல் உள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் பத்து ஆண்டுகளாக பாதித்த தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காத நிலையில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பாமாயிலுக்கு பதில் ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். வருகின்ற ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் தாக்களில் இந்த அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.