ஒடிசா மாநிலம் பாலசோரில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் ரயில் உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள் விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில் 290க்கும் மேற்பட்ட பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் 10 பேர் கொண்ட சிபிஐ குழு பாலசோர் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு மூன்று ரயில் விபத்து குறித்து விசாரணையைத் தொடங்கியது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு ரயில்வே வாரியம் ஞாயிற்றுக்கிழமை பரிந்துரைத்தது.
முன்னதாக, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஷைலேஷ் குமார் பதக், பஹானாகா பஜார் ரயில் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை, சிக்னல் அறை மற்றும் சிக்னல் பாயின்ட் ஆகியவற்றிற்குச் சென்ற அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.
இது தவிர, பாலசோரில் உள்ள அரசு ரயில்வே போலீஸார் விபத்து தொடர்பாக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜூன் 3ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.