ஒருவார காய்ச்சலுக்கு மருத்துவமனை செல்லாமல் மெடிக்கலில் மருந்து வாங்கிக் கொடுத்ததால் 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆவடி பிள்ளையார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராம்ஜித் (33). இவரது மனைவி கல்பனா (30). உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இந்த தம்பதிக்கு அன்புல் (9), பிரன்சூல் (7) மற்றும் டிபிஹன் (2) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர். இதில் இரண்டு வயது குழந்தையான டிபிஹனை கல்பனா அங்கன்வாடியில் விட்டுவிட்டு, மீண்டும் மதியம் 12 மணியளவில் வீட்டிற்கு அழைத்து வந்து உணவு அளித்து படுக்க வைத்துள்ளார்.
வெகு நேரமாகியும் குழந்தை கண் விழிக்காததால் பதறிப்போன கல்பனா, உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். அப்போது, பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆவடி சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பெற்றோரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாகவே காய்ச்சல் இருந்ததாகவும், மருத்துவரிடம் அழைத்துச் செல்லாமல் மருந்தகத்தில் மருந்து வாங்கி கொடுத்து வந்ததாக தம்பதியர் கூறியுள்ளனர்.
இதனால் காய்ச்சல் காரணமாகவே குழந்தை இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் மருத்துவர்கள், “சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், மருத்துவரை அணுகி அதற்கு ஏற்ப மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தாமாக மருந்தகங்களுக்குச் சென்று மருந்துகளை வாங்க வேண்டாம்” என்று எச்சரித்துள்ளனர்.