பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று தந்துள்ளார் 22 வயதான துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர். யார் இந்த மனு பாக்கர்? அவர் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்கலாம்!!!
ஆரம்ப வாழ்க்கை:
ஹரியானாவின் ஜாஜர் மாவட்டத்தின் கோரியா எனும் கிராமத்தில் பிறந்தவர் மனு பாக்கர். இவரது தாய் பள்ளி ஆசிரியை, தந்தை மரைன் என்ஜினியர். பிப்ரவரி 18, 2002 இல் பிறந்த இவர் ஒரு புகழ்பெற்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர் ஆவார். இளம் வயதில் இருந்தே விளையாட்டின் மீது ஆர்வம் கொண்ட இவர், 2017 தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் விரைவில் அங்கீகாரம் பெற்றார். இளம் வயதிலேயே, குத்துச்சண்டை, டென்னிஸ், ஸ்கேட்டிங் மற்றும் ஹுயென் லாங்லான் எனப்படும் மணிப்பூரி தற்காப்புக் கலை போன்ற பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார்.
துப்பாக்கி சுடுதலில் ஆர்வம் ;
மனு பாக்கருக்கு துப்பாக்கிச்சுடுதலில் ஆர்வம் வந்தது கடந்த 2016 ஆம் ஆண்டு தான். தன்னுடைய 14வயதில் தான் துப்பாக்கிச்சுடுதலை விரும்பி தேர்ந்தெடுத்திருக்கிறார். ஸ்போர்ட்ஸ் ஷூட்டிங் கைத்துப்பாக்கியை வாங்கித் தருமாறு தன் தந்தையிடம் கேட்க, நிச்சயம் நீ ஒரு நாள் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வாய் மகளே என்று சொல்லியபடி இவருடைய தந்தை ராம் கிஷன் பாக்கர் ஸ்போர்ட்ஸ் ஷூட்டிங் கைத்துப்பாக்கியை வாங்கி கொடுத்திருக்கிறார்.
துப்பாக்கி பழுதால் நழுவிய ஒலிம்பிக் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் மனு பாக்கர் பதக்கம் வெல்வார் என பலரும் எதிர்பார்த்தனர். துப்பாக்கியில் கோளாறு ஏற்படவே அதை சரிசெய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டதால் அடுத்த 44 குண்டுகளை சுடுவதற்கு 36 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. இதனால் தகுதிச் சுற்றுடன் வெளியேறினார். கலப்பு 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலிலும், 25 மீட்டர் பிரிவிலும் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை தவறவிட்டார். நான்கு வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்ட சோக முகத்தோடு களத்தில் இருந்து மனு பாக்கர் வெளியேறினார். தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை குவித்து பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தயாராகினார்.
16 வயதில் ஒலிம்பிக் வீராங்கனைக்கு சவால்
16வது வயதில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீராங்கனை, மூன்று முறை உலக சாம்பியன் ஆகியோரை வீழ்த்தி தங்கம் வென்று சர்வதேச களத்தில் தடம் பதித்தார். 2018ல் காமன்வெல்த் போட்டிகள், ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல், இளையோருக்கான ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை வசப்படுத்தினார்.
இந்தியாவின் பெருமை:
கடந்த 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தவற விட்ட பதக்கத்தை தற்போது வென்று அசத்தி உள்ளார் மனு பாக்கர். ஒலிம்பிக் வரலாற்றில் துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்தியா வென்றுள்ள 5ஆவது பதக்கம் இதுவாகும். மனு பாக்கர் துப்பாக்கி சுடுதல் இறுதி போட்டியில் மொத்தம் 221.7 புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை வென்றார். முதல் 2 இடங்களை கொரியா வீராங்கனைகள் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.