மதுரை செல்லூர் பகுதியில் வனத்துறையினரின் விழிப்புணர்வு அறிவிப்பால், வீடுகளில் அனுமதியின்றி கிளிகள் வளர்த்தவர்கள் வியாழக்கிழமை 23 கிளிகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மதுரை மாவட்டத்தில் குறிப்பாக மாநகராட்சி பகுதியில் வனத்துறையின் அனுமதியின்றி வீடுகளில் கிளிகள் வளர்ப்பதாக புகார்கள் வந்தன. அதன்படி மதுரை வனச்சரக அலுவலர் சாருமதி, வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு வனச்சரகர் சசிக்குமார் ஆகியோர் தலைமையில் வனத்துறையினர் செல்லூர் பகுதியில் விழிப்புணர்வு அறிவிப்புகளை ஒலிபரப்பினர்.
மேலும் வீடு, வீடாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். இதில் விழிப்புணர்வு அடைந்த பொதுமக்கள் வனத்துறையின் அனுமதியின்றி கிளிகள் வளர்ப்பதை உணர்ந்து தாமாகவே முன்வந்து வனத்துறையினரிடம் கிளிகளை கூண்டுகளுடன் ஒப்படைத்தனர். இன்று 10 கிளிகளும், இன்று 13 கிளிகளையும் ஒப்படைத்தனர். மேலும் மாநகராட்சி பகுதியில் ஒலிபெருக்கி அறிவிப்புகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கிளிகளை வீட்டில் வைத்து வளர்ப்பது, விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றம். பொதுமக்கள் அனுமதியின்றி வீட்டில் கிளிகள் வைத்திருந்தால் மாவட்ட வன அலுவலகத்தில் ஜூலை 17ம் தேதிக்குள் ஒப்படைத்தால் வன உயிரினக் குற்ற வழக்கு பதிவு செய்யப்படாது. கிளிகளை ஒப்படைக்க தவறினால் வன விலங்கு (பாதுகாப்பு) சட்டத்தில் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் விதிமீறி வளர்த்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்” என்றார்.