13, 14 ஆகிய தேதிகளில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 13, 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து முனையங்களில் இருந்தும் செல்லும் கடைசி மெட்ரோ ரயில் சேவை இரவு 11 மணிக்குப் பதிலாக 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 18 ஆம் தேதி மட்டும் அனைத்து முனையங்களில் இருந்தும் புறப்படும் முதல் மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணிக்குப் பதிலாக காலை 4 மணிக்கே இயக்கப்படும். எனவே, ஜனவரி 13, 14, 18 ஆகிய தேதிகளில் பயணிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிட்டு கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.