கோடை காலத்தில் தெரு விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கான திட்டங்கள் குறித்து அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
வெப்ப அதிகரிப்பு மனித ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தண்ணீர் மற்றும் உணவுக்காக போராடும் தெரு விலங்குகளுக்கும் ஒரு பிரச்சனையாக இருப்பதாகக் கூறி, விலங்குகள் நல அறக்கட்டளையின் நிறுவனர் வி.இ.சிவா என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த கோடை காலத்தில் தெருநாய்கள், பூனைகள் மற்றும் இதர விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க தமிழக கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரியிருந்தார்.
தெருவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கக் கோரிய மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா மற்றும் நீதிபதி ஆர்.கலைமதி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், இந்த கோடை காலத்தில் தெருவிலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்குவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது. ஆறு வாரங்களுக்குள் அதற்கான திட்டங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறி வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.