அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் அதிகளவில் இருப்பதால் மக்களுக்கு குளிர்பானங்கள், வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள ஈரமானத் துண்டு ஆகியவற்றை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பத்தைத் தணிக்க மக்கள் தலையை துண்டால் மறைத்து நிழல் உருவாக்கிக் கொள்கிறார்கள். சிலர் குளிர்ச்சியான குடிநீரை அடிக்கடி குடித்து உடலுக்கு நீர்சத்தினைப் பெறுகிறார்கள்.
வெப்பம் அதிகமாக இருப்பதால, வெளி விளையாட்டுகளை தவிர்த்து விடுகின்றனர். மாலை வெயில் குறைந்த பிறகே விளையாட செல்கின்றனர். தென்மேற்கு அமெரிக்காவில் வெப்பநிலை மிகவும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் 35 வயது பெண் ஒருவர் 20 நிமிடத்தில் 2 லிட்டரை அதாவது 4 பாட்டில்கள் தண்ணீர் குடித்ததால், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து, உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் டெவன் மில்லர் கூறுகையில், ”வெயிலில் இருந்து தப்பிக்க தண்ணீர் குடியுங்கள் என யாரோ சொன்னதைக் கேட்டு அவர் 20 நிமிடத்தில் 4 பாட்டில் தண்ணீரை குடித்துள்ளார். 20 நிமிடத்தில் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். பின்னர், சிறிது நேரத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்குச் சுயநினைவு திரும்பவில்லை.
பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு நிலைமை மோசமானது. சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்” என்று அவரது மூத்த சகோதரர் கூறினார். இதுகுறித்து மருத்துவர் பிளேக் ப்ரோபெர்க் கூறுகையில், ”இதுபோன்ற சம்பவங்கள் கோடைக் காலத்தில் தான் அதிகம் ஏற்படும். ஏனென்றால், அப்போதுதான் வெயில் காரணமாக திடீரென அதிகமான நீரை எடுத்துக் கொள்வார்கள். உடலில் அதிக தண்ணீர் சத்து இருந்தும், போதுமான சோடியம் இல்லாமல் போனால் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படலாம்” என தெரிவித்தார்.