மத்திய ஆயுதப்படையான சிஏபிஎஃப் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி அளித்திருப்பதற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளனர்..
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் மத்திய ஆயுதப்படைப் பிரிவில் மத்திய ரிசர்வ் காவல் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவை உள்ளன. இதில் மத்திய ரிசர்வ் காவல் படையில் காலியாக பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து இந்த தேர்வை மாநில மொழிகளில் எழுத அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.. இந்நிலையில் மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) காவலர்களுக்கான தேர்வு இந்தி, ஆங்கிலம் தவிர இனி 13 மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்தது. அதாவது, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்பூரி, மற்றும் கொங்கனி ஆகிய மொழிகளிலும் இந்த தேர்வுக்கான வினாத்தாள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தப் புதிய நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.
இந்நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.. மேலும் மத்திய அரசின் அனைத்து தேர்வுகளையும் மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.. இதே போல் தற்போது பிரதமர் மோடியும் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.. இதன் மூலம் இளைஞர்களின் விருப்பம் நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.