தமிழ்நாட்டில் சட்டப்பேரவையில் நேற்று 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். சட்டப்பேரவை கூடுவதற்கு முன்பாக அதிமுகம முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாகர் அப்பாவுவை சந்தித்து பேசியுள்ளார். செங்கோட்டையனின் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த மாதம் கோவையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இதன் காரணமாக செங்கோட்டையனுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு நிலவுவதாக தகவல் வெளியானது. நேற்று (மார்ச் 14, 2025) நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு செங்கோட்டையனுக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் தகவல் வெளியானது.
இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது நாளான இன்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்வதை தவிர்த்துள்ளார். அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். 2வது நாளாக அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளது பேசுபொருளாகி உள்ளது.