தமிழகத்தில் பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின்னர் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகள் கடந்த ஜூன் 12ஆம் தேதி திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் 14ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் 10, 11, 12 வகுப்புகள் படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள போகிறார்கள். அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்த பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சிறப்பு வகுப்புகளை பொறுத்தவரை பள்ளி முடிந்ததும் மாலை 5 வரையோ, அல்லது மாலை 5.30 மணி வரையோ நடைபெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.