fbpx

கோடை சுற்றுலா!… கைக் குழந்தையோடு பயணம் செல்கிறீர்களா?… அப்போ இதை கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்!

கைக் குழந்தையோடு பயணம் செய்யும் தாய்மார்கள் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டிய உதவிக்குறிப்புகள் குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

பயணத்தின்போது பச்சிளம் குழந்தைகளை அழைத்துச் செல்வது, மிகுந்த சிரமமான ஒன்று. குறிப்பாக நாம், தொலைதூர பயணத்தில் குழந்தைகளை அழைத்துச் செல்லும்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பதிவில் குழந்தையுடன் பயணிக்கும்போது கவனிக்க வேண்டியவை மற்றும் தவறாமல் எடுத்து வைக்க வேண்டிய பொருட்கள் என்னஎன்று பார்ப்போம்.பசி, சூழல், வெப்பநிலை, சப்தம் போன்ற காரணங்களால் திடீரென குழந்தைகள் அழத்தொடங்கிவிடும். பெற்றோர்களால் அந்த சூழலில் குழந்தையை சமாதானப்படுத்தவும் முடியாது. எந்த பயணமும் பச்சிளம்குழந்தைக்கு அவ்வளவு எளிதாக ஒப்புக்கொண்டுவிடாது.

பிறந்த குழந்தை எப்போது பயணத்திற்கு தயாராகும் என்று தெரியுமா? அதெல்லாம் குழந்தையின் நோய் எதிர்ப்பு திறனின் அளவு பொருத்துதான். சில குழந்தைகள் இரண்டாவது நாளே தயாராகிவிடும். சில குழந்தைகளுக்கு 20 நாட்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். ஆனால், மருத்துவர்கள் குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சி 3 முதல் 6 மாதங்கள் என்கிறார்கள். ஒரு சில குழந்தைகளுக்கு இன்னும்கூட கால அளவு தேவைப்படலாம். எத்தனை நாளுக்குப் பிறகு அழைத்துச் செல்லலாம் என்பதை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முடிவு செய்யுங்கள்.

குழந்தைகளுக்கு போடவேண்டிய தடுப்பூசிகளை முதலில் போட்டுவிட வேண்டும். எந்த ஊரில் என்ன நோய் பரவல் இருக்கும் என்பதெல்லாம் தெரியாது. எதுவாக இருந்தாலும் உடனடியாக குழந்தையைத்தான் தாக்கும். ஆக, நாம் போகும் ஊரில் எதாவது வைரஸ் காய்ச்சல் பரவுகிறதா? வேறு எதாவது நோய் தொற்று இருக்கிறதா என்பதையெல்லாம் முன்கூட்டியே அலசி, அதற்கேற்ப தடுப்பூசி போட்ட பிறகே பயணிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த பயணத்தை ரத்து செய்துவிடுங்கள்.

குழந்தைகளுக்கான உணவு விஷயத்தில் கவனமாகவே இருக்க வேண்டும். எத்தனை மாத குழந்தை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். அரை திட உணவோ திரவ உணவோ,குழந்தைக்கு ஏற்றதை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.வழியில் வாங்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பயணத்தை ஒருபோதும் தொடங்கவே கூடாது.எந்த ஊருக்கு செல்கிறோம் எவ்வளவு நேரம் ஆகும் என்பதைப் பற்றிய சரியான திட்டமிடலுடனும், அதற்கான முன்னேற்பாடுகளுடனும் பயணத்தை தொடங்க வேண்டும்.

குறைந்தபட்சம் அடுத்த 5 முதல் 8 மணி நேரத்துக்கான உணவை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சி ஆற வைத்த பாலை பாதுகாப்பான ஒரு புட்டியில் எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், அவர்களுக்கு ஏற்ற உணவை எடுத்துக்கொள்வது மிக அவசியம். அலைச்சல், மன உளைச்சல் போன்ற காரணங்களால், குழந்தைகளுக்கு உணவளிப்பது தடைபடக் கூடாது.பழம், ஹோம்மேட் ரொட்டிகள் எல்லாம் பேக் செய்து கொள்ளுங்கள்.

குழந்தை எவ்வளவு நேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்கும், மலம் கழிக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு உணர்ந்திருப்போம். அதற்கேற்ற வகையிலான டையபர்களை எடுத்துக்கொள்வது சிறந்தது. இதில், முக்கியமாக கவனிக்க வேண்டியது, குழந்தைக்கு அணிவிக்கும் டையபர் காற்றோட்டமானதா என்பது.
சில இறுக்கமான டையபர்களால் தோல் சிவந்து போதல், அரிப்பு, தடிப்பு போன்ற பாதிப்புகளும் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், சரியான டையபர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். தவிர, தொடர்ச்சியாக ஒரே டையபரை அணிந்திருக்கச் செய்யாமல், ஒருமுறை மலம் அல்லது சிறுநீர் கழித்த பிறகு சுத்தம் செய்ய தேவையான தண்ணீர் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பச்சிளம் குழந்தைகளை வைத்துக்கொண்டு நம்மால் பயணம் செய்யவே முடியாது. கூடுமானவரை குழந்தை ஓரளவுக்கு வளரும் வரையில் பெற்றோரில் ஒருவர் மட்டுமே வெளியூர் பயணத்தை வைத்துக்கொள்வது சிறந்தது. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே குடும்பத்துடன் பயணிக்க வேண்டும்.பெரும்பாலும் பேருந்து பயணத்துக்கு நோ சொல்லிவிடுவது நல்லது. வாடகை கார் எடுத்துக்கொள்வதோ அல்லது ட்ராப்பிங் சர்வீஸ் கொடுக்கும் நிறுவனங்களின் காரை பயணத்துக்கு பயன்படுத்துவதோதான் சிறந்தது. அப்போதுதான் நம் விருப்பப்படி பயணம் அமையும். கார் கிடைக்காதவர்கள் ரயிலை தேர்ந்தெடுங்கள்.

கணவன் வண்டியை ஓட்டும்போது மனைவி அருகில் அமர்ந்துகொள்வது வழக்கம். அப்போதுதான் பேச்சு துணையாக இருக்கும் என்பது எல்லாம் சரி. ஆனால், குழந்தையை வைத்துக்கொண்டு முன் இருக்கையில் இருவரும் அமர்ந்து பயணிப்பது அவ்வளவு நல்லதல்ல. கணவனோ, மனைவியோ இருவரில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஒருவர் பின் இருக்கையில் அமர்வதுதான் சிறந்தது. அப்போதுதான் குழந்தையும் இறுக்கமாக உணராமல் நிம்மதியாக தூங்கும்.

தவிர்க்கவே முடியவில்லை. பேருந்துதான் எங்களுக்கு ஒரே வழி… அவசர கதியில் டேக்ஸி பிடிக்க முடியவில்லை எனும் பெற்றோரா நீங்கள்? இந்த சூழலில் பயணத்தை முடிந்தால் ரத்து செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் 6 மணி நேரத்துக்கு மிகாத வகையில் பயணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். வழியில் ஒரு ஊரில் இறங்கி, கொஞ்சம் ரீஃப்ரஷ் ஆகிவிட்டு, மீண்டும் பயணத்தை தொடருவது சிறந்தது. உறவினர் அல்லது நண்பர்கள் இருக்கும் ஊர்களை வழித்தடமாக பயன்படுத்துவது சிறந்தது. குழந்தை தூங்கும் நேரத்தை பயண நேரமாக வைத்துக்கொள்வது சிறந்தது. அது இரவாக இருக்கும்பட்சத்தில், வழி நடுவில் குழந்தை விழித்தால் அதன் கவனத்தை திசைதிருப்ப சிறிய ரக டார்ச் லைட்டை வைத்துகொள்ளலாம். அதைப் பார்க்கும்போது அழுகையில் இருந்து குழந்தை விடுபட்டு சிரிக்கத் தொடங்கிவிடும்.

Kokila

Next Post

கோடை விடுமுறை! வெயிலோடு விளையாடி! வெயிலோடு உறவாடி! வெயிலோடு மல்லுக்கட்டும் மாணவர்களுக்கான டிப்ஸ்!

Sun May 7 , 2023
கோடைக் காலத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் குறித்து இங்கே காண்போம். கோடைக் காலத்தில் வெயிலில் தாக்கமானது உச்சத்தில் இருந்து வருகிறது. உலகில் உள்ள அனைத்து உயிர்களும் பல்வேறு விதமான சிக்கல்களை இந்த நேரத்தில் சந்தித்து வருகின்றன. பெரியவர்களுக்கே இந்த நேரத்தில் உடல் ரீதியான சிக்கல்கள் ஏற்படும். அப்போது மாணவர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள். கோடைக்காலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அம்மை போன்ற […]

You May Like