சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பல திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுப்போக்குவரத்தை அதிகரிக்கும் வகையில் பேருந்து, புறநகர் ரயில்களுடன் மெட்ரோ ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருந்ததால் தொடக்கத்தில் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்த மக்கள் தயங்கினர். இதனையடுத்து, பயண கட்டணம் குறைக்கப்பட்டதை அடுத்து தற்போது மக்கள் அதிக அளவு மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், ”மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளான டிசம்பர் 3ஆம் தேதி க்யூஆர் பயணச்சீட்டுகளை பயன்படுத்தி பயணித்த பயணிகளுக்கு ரூ.5 என்ற பிரத்யேகக் கட்டணத்தை வழங்கியது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 3ஆம் தேதி பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதனால் டிசம்பர் 17ஆம் தேதி ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிசம்பர் 17ஆம் தேதியன்று மட்டுமே. அதுவும் இச்சலுகை இ-க்யூஆர் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்கார சென்னை அட்டை, மொபைல் ஆப் மூலம் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் பயணச்சீட்டு முறைக்கு இச்சலுகைக்கு பொருந்தாது. டிஜிட்டல் பயணச்சீட்டுகளை ஊக்குவிக்க இந்த பிரத்யேக கட்டண சலுகை வழங்கப்படுவதாகவும், மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.