தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என அண்மையில் கூட்டுறவுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து முன்னா, சோட்டு என்ற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் இன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
முதற்கட்டமாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டியூசிஎஸ் எனப்படும் திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் இந்த விற்பனை தொடங்கப்பட இருக்கிறது. அதன் பிறகு தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய இடங்களில் ரேஷன் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரிவாக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் ஐந்து கிலோ எடைகளில் சிலிண்டர்களை விற்பனை செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். சென்னையில் முதன்முறையாக 2 கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 958 ரூபாயும், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டரை பெறுவதற்கு 1515 ரூபாயும் நுகர்வோர் செலுத்த வேண்டிவரும் என கூறப்படுகிறது. அதற்குப் பின்னர் கேஸ் சிலிண்டர் தீர்ந்து விட்டால் அதற்கான தொகையை மட்டும் கொடுத்து சிலிண்டரை வாடிக்கையாளர்கள் நிரப்பிக் கொள்ளலாம். சென்னையில் இந்த மாதம் இரண்டு கிலோ சமையல் எரிவாயு 250 ரூபாய்க்கும், ஐந்து கிலோ 575 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.