தமிழ்நாட்டில் பொம்மை முதலமைச்சராக முக.ஸ்டாலின் செயல்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வை கண்டித்து, செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். திராவிட மாடல் ஆட்சி எனக்கூறி முதலமைச்சர் முக.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருவதாகவும் தெரிவித்தார். திமுக குடும்ப ஆட்சி நடத்துவதாகவும், 4 பேர் முதலமைச்சர்களாக உள்ளதாகவும் விமர்சித்தார். இதனால், மக்களுக்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை என்ற அவர், சொத்துவரி, மின்கட்டண உயர்வு, பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்ட தரமற்ற வெல்லம் உள்ளிட்ட முறைகேடுகள் நினைவிற்கு வருவதாக சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்து விட்டது. வெளிமாநிலங்களில் இருந்துதான் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வருகிறது என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார். காவல்துறை மற்றும் உளவுத்துறையை கையில் வைத்திருக்கும் திமுக அரசுதான் இதனை தடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதற்கான முறையான ஆவணங்களை முன்வைக்காத காரணத்தினாலே ஆன்லைன் ரம்மி தடையை நீதிமன்றம் ரத்து செய்தது. தமிழ்நாட்டில் முக.ஸ்டாலின் பொம்மை முதலமைச்சராக செயல்படுகிறார்”. இவ்வாறு அவர் குற்றம்சாட்டினார்.