காசா பகுதிகளில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு நடத்திய போர் தாக்குதலில் அடையாளம் தெரியாத 1000 பேரின் உடல்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஒருவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலு இஸ்ரேல் ராணுவமும் வான்வழி தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துவருகிறது. இந்த தாக்குதலால் காசா நகர் முழுவதும் உருக்குலைந்து போனது. இருத்தரப்பினரின் போர் அடுத்தடுத்து தீவிரமடைந்ததையடுந்து வருவதால் உலக நாடுகள் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.
ஆனால், போரின் கோரத்தாண்டவத்தால் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே தண்ணீர், உணவு, அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளின்றி மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த போரில் இதுவரை காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.
தொடர்ந்து 20வது நாளாக இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், போர் தாக்குதலின் போது காசா பகுதிகளில் இடிபாடுகளுக்கு அடியில் அடையாளம் தெரியாத 1,000 உடல்கள் புதைந்து கிடப்பதாகவும், உயிரிழந்த உடல்களின் எண்ணிக்கை இன்னும் இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ரிச்சர்ட் பீபர்கார்ன் அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளார். இதற்கிடையில், இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையே நடந்து வரும் போரால், காசா பகுதியில் உள்ள பொதுமக்கள் உணவு, தண்ணீர், மின்சாரம் உட்பட அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றனர். இதனால், காசாவில் வாழும் மக்களில் 96% பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாக மேற்கு ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் தெரிவித்துள்ளது.