பர்த்டே பார்ட்டியில் 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.
டெல்லி மாநிலம் உத்தம் நகரில் 5 மற்றும் 6 வயது சிறுமிகளின் உறவினர்கள் அவர்களின் வீட்டிற்கு வெளியே பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அப்பொழுது அவர்களின் பக்கத்து வீட்டுக்காரரான தீபக் என்ற 23 வயது இளைஞர் சிறுமிகளிடம் ஆசைவார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். தனியாக இருந்த அந்த சிறுமிகளிடம் நைசாக பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், சிறுமிகளை காணவில்லை என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, இரண்டு சிறுமிகளும் தீபக்கின் வீட்டில் இருப்பதை அறிந்த பெற்றோர், அவர்களை மீட்டு வந்தனர்.
இந்நிலையில், சிறுமிகளை துன்புறுத்தியதாக கூறி தீபக்கை அப்பகுதி மக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். பிறகு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீபக்கை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து துணை ஆணையர் எம்.ஹர்ஷா வர்தன் கூறுகையில், “சிறுமிகளை பலாத்காரம் செய்த நபரை கைது செய்ததாகவும், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகளுக்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார். மேலும் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.