காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை பெண்ணின் தந்தை வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே வீரப்பட்டி கிராமம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த முத்துக்குட்டி (50) என்பவரது மகள் ரேஸ்மா (20). இவர், கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான வடிவேல் என்பவரது மகன் மாணிக்கராஜை (26) காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, சில தினங்களுக்கு முன்னர் காதல் ஜோடி இருவரும் ஊரை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன் இருவரும் ஊருக்கு வந்துள்ளனர். அப்போது, இவர்களது திருமணத்திற்கு ரேஷ்மாவின் தந்தை முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஊர் பஞ்சாயத்து மூலம் பேசி அவர்கள் இருவரையும் தனிக்குடித்தனம் வைத்துள்ளனர். ஆனாலும், முத்துக்குட்டி மகள் மீது ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து இன்று மாலை ரேஷ்மா மற்றும் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த முத்துக்குட்டி இருவரையும் சராமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய முத்துக்குட்டியை தேடி வருகின்றனர்.