இலங்கையில் அதிபர் இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற நிலைமை தான் தமிழ்நாட்டில் திமுகவுக்கு வரும் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், ”திமுகவுக்கு தலைவர் ஒருவர் தான்; ஆனால் அதிமுகவுக்கு தொண்டர்கள் அனைவரும் தலைவர்கள் தான் என கூறினார். கருணாநிதியால் கூட அதிமுகவை அழிக்க முடியவில்லை. எம்ஜிஆர் இறந்த பிறகு ஜெயலலிதா அதிமுகவை பல மடங்கு உயர்த்தி இந்தியாவின் மிகப்பெரிய 3-வது கட்சியாக மாற்றி காட்டினார். இலங்கையில் நடைபெற்ற குடும்ப ஆட்சியால், அதிபராக இருக்கும் போதே இரவோடு இரவாக நாட்டை விட்டு தப்பியோடிய நிலைமை, தமிழ்நாட்டில் திமுகவுக்கு வரும். மக்கள் புரட்சி தமிழ்நாட்டிலும் வெடிக்கும்.
காற்றை எவ்வாறு தடுத்து நிறுத்த முடியாதோ அதுபோல் தான் அதிமுகவின் வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சியின்போது, மும்முனை மின்சாரம், 24 மணி நேரமும் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மின்சாரம் தடையின்றி வழங்கப்பட்டது. ஆனால், இப்போது, மின்சாரம் எப்போது போகும், எப்போது வரும் என மக்களால் சொல்ல முடியவில்லை. வீட்டு வரி 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாகவும் மற்றும் வீட்டு வரி சொத்து வரி ஆகியவை உயர்ந்திருக்கிறது. பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது ஏமாற்றி விட்டனர். தற்போது தாய்மார்கள் அந்த பணம் எங்கே என்று கேட்டால் அதற்கு பல காரணங்களை சொல்லி ஏமாற்றி வருகின்றனர்”. இவ்வாறு அவர் பேசினார்.