4ஆம் வகுப்பு மாணவனை ஆசிரியர் ஒருவர், மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கடாக் மாவட்டத்தில் உள்ள ஹாக்ளி (Hagli) கிராமத்தில் ஆதர்ஷ் என்ற அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த அடிப்படையில் முத்தப்பா என்ற ஆசிரியர் பணியாற்றி வருகிறார். இவர் 4ஆம் வகுப்பு படிக்கும் 10 வயது மாணவரான பரத் என்பவரை அடித்து உதைத்துள்ளார். மேலும், மாணவரை முதல் மாடியிலிருந்து கீழே தள்ளியுள்ளார். இந்த சம்பவத்தில் பரத் பரிதாபமாக உயிரிழந்தார்.

முத்தப்பா அதே பள்ளியில் பணியாற்றும் பரத்தின் தாயாரான கீதாவையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சனை காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள முத்தப்பாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.