நீலகிரி மாவட்டம் ஊட்டி பைக்காரா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி பெற்றோருடன் வசித்து வந்தார். இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். தற்போது மாணவிக்கு இறுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவி, மாலையில் வீடு திரும்பவில்லை. எப்போதும் வேலைக்கு செல்லும் பெற்றோர் வீட்டிற்கு வருவதற்கு முன்பே மாணவி வீட்டிற்கு வந்துவிடுவார். ஆனால், மாலை வெகுநேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்த நிலையில், அங்கர்போர்டு அருகே உள்ள புதருக்குள் சிறுமி ஒருவர் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் மாணவியின் பெற்றோர், கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த இடத்திற்கு சென்றனர். அங்கு இறந்த நிலையில் கிடந்த மாணவியை பார்த்தனர். மாணவி பலத்த காயங்களுடன் அலங்கோலமான நிலையில் கிடந்தார். அது மாயமான தங்கள் மகள் என்பதை அறிந்ததும் மாணவியின் பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்து பைக்காரா காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற காரை போலீசார் கட்டுப்பாட்டில் எடுத்தனர். விசாரணையில் பள்ளிக்கு சென்ற மாணவியை சிலர் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றது தெரியவந்தது. அப்போது, மாணவியை கொன்ற நபர்களை கைது செய்யும் வரை உடலை எடுக்க விடமாட்டோம் என தெரிவித்து மாணவியின் உறவினர்களும், பொதுமக்களும் ஊட்டி-கூடலூர் சாலையில் இரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் நீண்ட நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்து கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர். போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மாணவியை கடத்திச் சென்ற கார், கக்கோடுமந்து என்ற இடத்தைச் சேர்ந்த ரஜ்னேஷ் குட்டன் (25) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அவர் தான் மாணவியை காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்து கொன்றதும் தெரியவந்தது. தற்போது அந்த இளைஞர் தலைமறைவான நிலையில், அவர் மீது போக்சோ, கடத்தல், கொலை உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ரஜ்னேஷ் குட்டன் கைதான பிறகு தான், இந்த கொடூரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை கண்டுபிடித்து அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.