குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.
74-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழக அரசு சார்பில் வழக்கமாக சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை அமைந்துள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறும்.. ஆனால் அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற உள்ளதால் இந்த ஆண்டு உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.. இதற்கான அணிவகுப்பு ஒத்திகை சென்னை மெரினா கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது..
இந்நிலையில் குடியரசு தின விழாவில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் இறையன்பு கடிதம் எழுதி உள்ளார்.. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள கடிதத்தில், 15 இடங்களில் பட்டியலின ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதில் பிரச்சனை என்று புகார் வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்..
பிரச்சனைகள் உள்ள 15 இடங்களிலும், பட்டியலின ஊராட்சி தலைவர்கள் கொடி ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.. கிராம சபை கூட்டங்களிலும் பட்டியலின ஊராட்சி தலைவர்களை சாதி பாகுபாடின்றி கண்ணியமாக நடத்திட உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்டுள்ளார்..
எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் குடியரசு தின விழா இணக்கமாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அக்கடிதத்தில் அறிவுறுத்தி உள்ளார்.. குடியரசு தின விழாவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்..