காரைக்காலில் காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 700-க்கும் மேற்பட்டோருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சனிக்கிழமையன்று பொது சுகாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மக்கள் குடிநீரை காய்ச்சி, வடிகட்டிய பின்னரே அருந்த வேண்டும், சூடான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும், திறந்தவெளியில் இயற்கை உபாதைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும், உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் வாந்தி, வயிற்றுப் போக்கால் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் 691 பேர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் காரைக்கால் மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் சிலருக்கு காலரா தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், காலராவால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்து விட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காலரா நோய் பாதிப்புக்கான காரணத்தை கண்டறிய மருத்துவக் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.