மத்திய ஆயுதப்படையின் பல்வேறு பிரிவுகளில் காலியாகவுள்ள 506 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு டிகிரி முடித்த ஆண்களும், பெண்களும் விண்ணப்பிக்கலாம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெவ்வேறு படைப்பிரிவுகள் உள்ளன. இந்த படைப்பிரிவுகளுக்கு தேவையான ஆட்கள் அவ்வப்போது முறையான அறிவிப்புகளுடன் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், யுபிஎஸ்சி எனப்படும் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் சார்பில் மத்திய போலீஸ் ஆயுதப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடங்கள்: மத்திய ஆயுதப்படையில் 5 பிரிவுகளில் காலியாக உள்ள 506 உதவி கமாண்டன்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. அதன்படி பிஎஸ்எஃப் எனும் எல்லை பாதுகாப்பு படையில் 186 காலியிடங்கள், சிஆர்பிஎஃப் எனும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் 120 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் சிஐஎஸ்எஃப் எனும் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 100 இடங்கள் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் பிரிவில் (ஐடிபிஎஃப்) 58 காலியிடங்கள், எஸ்எஸ்பி படையில் 42 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு என்பது 2024 ஆகஸ்ட் 1ஆம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். இந்த தேதியின் அடிப்படையில் விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 20 வயது முதல் அதிகபட்சமாக 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும் தளர்வு வழங்கப்படும்.
கல்வி தகுதி: விண்ணப்பம் செய்வோர் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விபரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் அரசு விதிகளின்படி நல்ல சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி? : தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் upsconline.nic.in இணையதளம் மூலம் மே மாதம் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.200 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மெடிக்கல் டெஸ்ட், மெரிட் லிஸ்ட் மற்றும் நேர்க்காணல் முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.