தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். பின்னர், ஒருவழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பெண்களின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே புதிதாக விண்ணப்பித்துள்ள பெண்களுக்கு 3 மாதத்தில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். எனவே, சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து, தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.1,000 உரிமைத்தொகையை ரூ.1,500 அல்ல ரூ.2,000 ஆக உயர்த்த திமுக அரசு முடிவு செய்திருப்பதாக ஒருபக்கம் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் தான், பெண்களுக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி உரிமைத்தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் நிலையில், இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதி வங்கிக் கணக்கில் பணம் போடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினம் என்பதால், அன்றைய தினமே வங்கிக் கணக்கில் ரூ.1,000 வரைவு வைக்கப்படும் என கூறப்படுகிறது.