சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (28-11-2023) தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். பின்னர் புயலாக வலுப்பெறக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோரப் பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பு பொறுத்தவரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த வரும் 5 நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த வரும் சில தினங்களுக்கு கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. டிசம்பர் 2, 3ஆம் தேதிகளில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் டெல்டா மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.