கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கேரளா மாநிலம் திருநாவாயா மற்றும் திரூர் இடையே சென்று கொண்டிருந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கற்கள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதில் ஒரு பெட்டியின் ஜன்னல் கண்ணாடி சேதமடைந்தது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது. வடக்கு கேரளாவில் திருநாவாயா மற்றும் திரூர் இடையேயான பகுதி வழியாக வந்தே பாரத் ரயில் சென்றபோது நேற்று மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
சம்பவத்திற்குப் பிறகு ரயில் திருவனந்தபுரம் நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் ரயில் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விசாரணை நடந்து வருகிறது” என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி சேதத்தை ஏற்படுத்தினால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.