மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி திட்டையில் 35 வயதான சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். தனியார் வங்கியில் வேலை செய்து வரும் இவர், சிதம்பரம் அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது இவரிடம் லட்சுமி என்ற பெண் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். 29 வயதான லட்சுமி, சீர்காழி அடுத்த கொடியம்பாளையம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர். அப்போது லட்சுமி, தான் ஒரு டாக்டர் எனவும், சிதம்பரத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம், நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து, கடந்த 20ம் தேதி சிவச்சந்திரன் மற்றும் லட்சுமிக்கு சீர்காழியில் திருமணம் நடைபெற்றது. திருமணதிற்காக சிவசந்திரனின் நண்பர்கள் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த லட்சுமியின் முன்னாள் கணவர், நெப்போலியன் உடனடியாக சிவச்சந்திரனுக்கு போன் செய்துள்ளார். மேலும், லட்சுமி தன்னையும் ஏமாற்றி தான் திருமணம் செய்து கொண்டார் என்று கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தொடர்ந்து, இதுகுறித்து சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், லட்சுமியை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளியான தகவல் போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ஆம், லட்சுமி பழையாறை சேர்ந்த சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஆனால் ஒரு சில ஆண்டுகளில் சிலம்பரசன் இறந்து விட்டார்.
இதனால் லட்சுமி, தனது 2 குழந்தைகளையும் தனது தாய் வீட்டில் விட்டு விட்டு, புத்தூரை சேர்ந்த பெயிண்டர் நெப்போலியன் என்பவரை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். மேலும், இவர் நெப்போலியனிடம் தனது பெயர் மீரா என்றும், தான் நர்ஸ் வேலை செய்வதாகவும் கூறி காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர் நெப்போலியனையும் பிரிந்து சென்று, கடந்த 2021ம் ஆண்டு ராஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். ராஜா, சிதம்பரம் கோல்டன் நகரில் வசித்து வருகிறார்.
லட்சுமி ராஜாவிடம், தனது பெயர் நிஷாந்தினி என்றும், எம்பிபிஎஸ், எம்எஸ் படித்து விட்டு வீட்டில் இருப்பதாகவும் கூறி அவரையும் காதல் திருமணம் செய்துள்ளார். பின்னர் ராஜாவிடம், தான் கோவையில் டாக்டராக பணிபுரிய போகிறேன் என்று கூறி வீட்டை விட்டு சென்று விட்டார். இந்நிலையில் தான் கடந்தாண்டு சீர்காழி திட்டையை சேர்ந்த சிவசந்திரனை காதல் திருமணம் செய்துள்ளார். இவர் இந்த அனைத்து திருமணங்களையும் பணத்துக்காக செய்தது தெரியவந்துள்ளது. இதைகேட்ட போலீசாரே திகைத்துள்ளனர்.
இந்த தகவல் தெரிந்ததும், லட்சுமி தங்களையும் ஏமாற்றி விட்டதாக அவரது முன்னாள் கணவர்கள் ராஜா மற்றும் நெப்போலியனும் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். மேலும் கரூரை சேர்ந்த லட்சுமியின் மற்றொரு கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், அவருக்கு லட்சுமி பற்றி தெரியவில்லை. இதையடுத்து போலீசார் லட்சுமியை கைது செய்து சீர்காழி நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, திருவாரூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
லட்சுமி ஆண்களிடம் லிப்ட் கேட்டு டூவீலர், கார்களில் செல்வாராம். அப்போது அவர்களிடம் தான் டாக்டர் என நைசாக பேசி, ஆண்களுக்கு காதல் வலை விரிப்பாராம். அப்படி அதில் சிக்கியவர்கள் தான் இன்று லட்சுமியின் கணவர்களாக உள்ளனர். மேலும், கரூரை சேர்ந்த ஒருவர் லட்சுமியை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும், அவர் மாதமாதம் குடும்ப செலவுக்காக ரூ.50,000 அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை, லட்சுமி தனது சம்பளம் என கூறி கணவர்களை ஏமாற்றி வந்துள்ளார். டாக்டர் மனைவி என்பதால், இவரது ஒரு கணவர் வீட்டில் இருந்த மாடுகளை விற்று வெஸ்டர்ன் டாய்லெட் கட்டி கொடுத்துள்ளார்.
Read more: கேரட் தொண்டையில் சிக்கி 2 வயது குழந்தை துடிதுடித்து பலி.. கதறிய பெற்றோர்.. சென்னையில் சோகம்..!!