ஒரு மனைவி தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதும் குற்றமல்ல என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், தனது மனைவியின் தொல்லை தாங்க முடியாததால், விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால், விவாகரத்து வழங்க நீதிமன்றம் மறுத்த நிலையில், இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், “தன்னுடைய மனைவி ஆபாசப் படங்களுக்கு அடிமையானவர் என்றும் அடிக்கடி சுயஇன்பத்தில் ஈடுபடுகிறார் என்றும் மனைவி பால்வினை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்றும் கூறியிருந்தார். ஆனால், பாலியல் ரீதியாக பரவும் நோயால் மனைவி பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தும் எந்த ஆவணங்களையும் கணவர் சமர்ப்பிக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ஒரு மனைவி தனிப்பட்ட முறையில் ஆபாசப் படங்களை பார்ப்பதும் குற்றமல்ல. ஆண்கள் மத்தியில் சுய இன்பம் உலகளாவியது என்று ஒப்புக் கொள்ளப்பட்ட நிலையில், பெண்கள் சுயஇன்பம் செய்வதை களங்கப்படுத்த முடியாது. ஒரு பெண் திருமண உறவை தாண்டி பாலியல் உறவு வைத்துக் கொண்டால், விவாகரத்துக்குக் காரணமாகிவிடும்.
ஆனால், சுய இன்பத்தில் ஈடுபடுவது திருமணத்தை முறித்துக் கொள்ள ஒரு காரணமாக இருக்க முடியாது. கற்பனையில் கூட, இது கணவருக்கு கொடுமையை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது” என்று கூறினர். இதையடுத்து, கணவர் தொடர்ந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.