தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்று தனி பெரும் கட்சியாக தவெக இருந்தாலும், ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காததால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவை தவெக நாடியது. அதன்படி, தவெகவின் அழைப்பை ஏற்று திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் தவெக கூட்டணிக்கு சென்றது.
அதேசமயம், இடதுசாரிகள், விசிக மற்றும் ஐ.யூ.எம்.எல். ஆகிய கட்சிகள் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவை வழங்கின. இதன் மூலம் பெரும்பான்மையை பெற்ற தவெக, கடந்த 10ஆம் தேதி தமிழ்நாட்டில் புதிய அரசை நிறுவியது. விஜயுடன் 9 அமைச்சர்களும் பதவி எற்றனர். தொடர்ந்து நேற்றைய தினம் தற்காலிய சபாநாயகர் கருப்பையா புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து இன்றைய தினம் சட்டமன்றம் கூடியது.
ஆளும் தவெக சார்பில் சபாநாயகர் பதவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பெயர் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நடைமுறைகளில் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் சட்டமன்றத்தில் பதவியேற்றதையடுத்து, அவருக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
பேரவை தலைவருக்கு வாழ்த்து தெரிவித்த அமமுக எம்.எல்.ஏ காமராஜ், முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பதவி ஏற்ற முதல் நாள் இலவசங்களை அறிவிப்பார் என தமிழக மக்கள் எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் தமிழக மக்களுக்கு முக்கியதுவம் கொடுக்க கூடிய முக்கியமான 3 திட்டங்களுக்கு கையெழுத்து போடப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த 3 நாட்களாக நான் சென்னையில் இருக்கிறேன். இதுவரை இல்லாத சென்னையை நான் பார்க்கிறேன் என்றார்.
தொடர்ந்து பேசிய விசிக சட்டமன்றக் குழு தலைவர் வன்னியரசு இன்று காலை பள்ளி, கோயில்கள், பேருந்து நிலையம் சுற்றி உள்ள 717 மதுபான கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவரது நடவடிக்கைக்கு விசிக வரவேற்பு அளிக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக கையெழுத்திட்ட 3 திட்டங்களுக்கும், அரசியல் நாகரிகம் கருதி முதலமைச்சர் விஜய் மூத்த தலைவர்களை சந்தித்ததை காமராஜருடன் ஒப்பிட்டு பாராட்டு தெரிவித்தனர்.



