தமிழக சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில், விஜய் தலைமையிலான தவெக அரசு ஆட்சிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, புதிய அரசு அமைந்த நிலையில் சட்டமன்ற நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, வருகிற 13ஆம் தேதி தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதற்கிடையில், ஆளும் தவெக சார்பில் சபாநாயகர் பதவிக்காக ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏ ஜே.சி.டி. பிரபாகர் பெயர் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நடைமுறைகளில் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகர் சட்டமன்றத்தில் பதவியேற்றதையடுத்து, அவருக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொடர்ந்து, தவெக அமைச்சர் செங்கோட்டையன், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோர் அவரை சபாநாயகர் இருக்கைக்கு அழைத்து சென்றனர். புதிய சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆளுங்கட்சி எதிர்கட்சிகளுக்கு சமமான உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.



