மத்திய அரசு காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) போராட்டங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது கருத்துக்கள் அபிஜித் திப்கே தலைமையிலான அந்த அமைப்பிற்கு ஆதரவானவை அல்ல என்று தெளிவுபடுத்தியுள்ளார்.
பாஜகவிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ (We the Leaders) என்ற அமைப்பைத் தொடங்கியுள்ள அண்ணாமலை, வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றினார். அப்போது மத்திய அரசை விமர்சிப்பது, பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டுவது மற்றும் ஜனநாயகத்தில் போராட்டங்களுக்கான உரிமையை ஆதரிப்பது எனப் பல விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
“நாங்கள் ஒருபோதும் காக்ரோச் ஜனதா கட்சியை ஆதரிக்க மாட்டோம். அவர்களின் கொள்கையும், எங்களது கொள்கையும் முற்றிலும் வெவ்வேறானவை” என்று கூறிய அண்ணாமலை, அதே வேளையில் ஜனநாயகத்தில் போராடுவதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
அதாவது, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி அக்டோபர் 10 அன்று போராட்டத்தில் ஈடுபட்ட CJP அமைப்பினரைக் காவல்துறையினர் கைது செய்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்குப் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில், அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “நாட்டின் பல மாநிலங்களில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் எனக்கு உண்டு. இந்தியாவின் ஒற்றுமையும் இறையாண்மையும் எனக்கு நன்றாகத் தெரியும். எனவே தேசபக்தி குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை.”
CJP போராட்டக்காரர்கள் தவறு செய்திருந்தால், பழிவாங்கும் நோக்கில் செயல்படாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கைது நடவடிக்கைகள் சட்டப் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் நம்புகிறோம்.
நாட்டின் இறையாணமைக்கு அச்சுறுத்தல் இருந்தால் IB, RAW போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தி அவர்களைச் சிறையில் அடையுங்கள். அதைவிட்டுவிட்டு எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் பொய்யான குற்றச்சாட்டுகளை உருவாக்க வேண்டாம். எனினும், தேர்தல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றம் போன்ற ஜனநாயக அமைப்புகள் மீதான மக்கள் நம்பிக்கையைக் சீர்குலைக்கும் முயற்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
பிரதமர் மோடி நல்ல பணிகளைச் செய்து வருகிறார் என்று பாராட்டிய அண்ணாமலை, அதே நேரத்தில், “பிரதமரை ஆதரித்தாலும், தவறு என்று நாங்கள் கருதும் விஷயங்களை எதிர்த்துக் கேள்வி கேட்க ஒருபோதும் தயங்க மாட்டோம்” என்றும் எச்சரித்தார்.
முன்னதாக, CJP அமைப்பின் போராட்ட முறைகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அரசை எதிர்க்கும் அவர்களின் உரிமையை அண்ணாமலை ஆதரித்திருந்தார். CJP தலைவர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரான்கா ஆகியோரின் கைது நடவடிக்கையைக் கண்டித்த அவர், டெல்லி காவல்துறையின் நடவடிக்கையையும் கேள்வி எழுப்பியிருந்தார்.
2011-ல் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலை எதிர்த்து, “மத்திய அரசுக்கு எதிராக டெல்லி சென்று போர் தொடுப்பேன்” என்று கூறியதை அண்ணாமலை நினைவுகூர்ந்தார். அப்போது பேச உரிமையிருந்த மோடியின் தற்போதைய ஆட்சியில், அரசைக் கேள்வி கேட்பவர்கள் கைது செய்யப்படுவது ஏன் என்றும் வினவினார்.
மேலும், டெல்லி ராம்லீலா நிகழ்வில் காக்ரோச் உருவப் பொம்மையை எரித்த பாஜக எம்.எல்.ஏ அசோக் கோயலின் நடவடிக்கையைக் குறிப்பிட்ட அண்ணாமலை, “பாஜக CJP-யை எதிர்க்கிறதா அல்லது அவர்களுக்கு இலவச விளம்பரம் தருகிறதா? 12 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் பாஜக தொடர்ந்து எதிரிகளை உருவாக்க முயல்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.
அண்ணாமலையின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அமைதியான போராட்டத்திற்கும் சட்டத்தை மீறுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அண்ணாமலை குழப்புகிறார் எனக் குற்றம் சாட்டினார். மேலும், “அண்ணாமலை ஜூன் 2026-ல் பாஜகவிலிருந்து விலகிவிட்டார், விமர்சிக்க அவருக்கு உரிமை உண்டு” என்றும் அவர் தெரிவித்தார்.



