ஓ.டி.டி-யில் தினமும் புதுப்படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், எந்த படத்தை பார்க்கலாம் என்ற குழப்பம் பலருக்கும் இருக்கும். திகில், மர்மம், சஸ்பென்ஸ் நிறைந்த படங்களை விரும்புபவர்களாக இருந்தால், இந்த வாரம் தவறாமல் பார்க்க வேண்டிய திரைப்படங்களில் ஒன்றாக ‘டெத் விஸ்பரர் 3’ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான ‘டெத் விஸ்பரர் 3’ (Death Whisperer 3) திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியுள்ளது. திகில் மற்றும் மர்மம் கலந்த இந்த திரைப்படம், 1972-ஆம் ஆண்டு நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு பாகங்கள் நாவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்த நிலையில், மூன்றாவது பாகம் புதிய கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. கதையின் நாயகனான யாக், தனது சகோதரியுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது சகோதரி மர்மமான சூழ்நிலையில் கடத்தப்படுகிறார். அவரை மீட்கும் முயற்சியில் யாக், பல ஆண்டுகளாக சாபத்தால் சூழப்பட்டதாக நம்பப்படும் ஒரு கிராமத்திற்குச் செல்கிறார்.
அந்த கிராமத்தில் அவரை எதிர்கொள்ளும் அமானுஷ்ய சம்பவங்கள், மர்மங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளே படத்தின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன. இறுதியில் தனது சகோதரியை யாக் மீட்டாரா? அந்த சாபத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? என்பதற்கான பதில்களை திகில் நிறைந்த திரைக்கதையுடன் படம் சொல்லுகிறது. யாக் கதாபாத்திரத்தில் நதேக் குகிமியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது சகோதரியாக நடித்துள்ள நாச்சா ஜெசிகாவும் தனது கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்துள்ளார். இருவரின் நடிப்பும் கதையின் உணர்வுகளை வலுப்படுத்துகிறது.
குறிப்பாக, படத்தில் இடம்பெறும் பல ஜம்ப் ஸ்கேர் காட்சிகள் பார்வையாளர்களுக்கு திடீர் அதிர்ச்சியையும், தொடக்கம் முதல் முடிவு வரை பதற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. திகில் படங்களை விரும்புபவர்கள் ஒரு நல்ல ஓ.டி.டி. அனுபவத்தை எதிர்பார்த்தால், ‘டெத் விஸ்பரர் 3’ அவர்களை ஏமாற்றாத படமாக இருக்கும். தற்போது இந்த திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங்கில் உள்ளது.
Also Read: உதயநிதி வீட்டை முற்றுகையிட்ட போலீஸ்… பக்கத்து வீட்டில் இருந்து வீடியோ எடுத்த விஜய்யின் நண்பர்!



