முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பல்வேறு கட்சிகள் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைப்பாடுகளை பதிவு செய்தன. முதலில் காங்கிரஸ் கட்சி சார்பில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் விசிக, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஐயுஎம்எல் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளும் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு தெரிவித்தன.
அந்த வரிசையில் விருத்தாச்சலம் தொகுதியின் தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார். அவர் பேசுகையில், “மனவேதனையுடன் சொல்லுகிறேன். இங்கு குதிரை பேரம் நடந்ததாக பேசப்படுகிறது. அந்த விஷயத்தை பற்றி இந்த சட்டசபையில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதை நினைத்து மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பதவி ஏற்ற அன்று நான் யாரையும் முகத்தை மூடிக் கொண்டு சந்திக்க மாட்டேன் என முதலமைச்சர் விஜய் கூறினார். ஆனால் உங்கள் இல்லத்திற்கு முகத்தை மூடிக் கொண்டு வந்து சந்தித்தது யார் என நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது குதிரை பேரம் உண்மை தான் என எண்ண தோன்றுகிறது.
உங்கள் ஆஸ்தான ஜோதிடர் ரதன் பண்டிட்க்கு அரசு உயர் பதவி கொடுத்துள்ளதை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது. ஜோதிடருக்கு பதவி கொடுப்பதம் மூலம் தமிழக இளைஞர்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் எனக் கூறி விஜய்யின் நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் ஆதரவு தெரிவிக்கவில்லை.



