மதுக்கடையா இது…? மருத்துவமனையா…? மத்தியப் பிரதேசத்தில் வித்தியாசமான அதிரடி!

Tasmac 2026 1

மதுப்பழக்கத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, மதுவுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் நோக்கில் மத்தியப் பிரதேசத்தில் புதிய விழிப்புணர்வு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, மதுக்கடைகளின் வாசலிலேயே மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள தியோரி, பண்டா பகுதிகளில் கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் அருந்தியதால் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விசாரணையில், உயிரிழந்தவர்களில் சிலருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்புகள் இருந்தது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் திலீப் குமார் யாதவ், மதுப்பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் உடல்நிலையை கண்காணிக்கவும், அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.

இதற்காக மதுக்கடைகள் திறப்பதற்கு முன்பாகவே அங்கு தினமும் மது வாங்க வருபவர்களின் விவரங்கள் கடை நிர்வாகத்தின் உதவியுடன் சேகரிக்கப்பட்டன. பின்னர் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் குழுவினர் மதுக்கடைகளுக்கு வெளியே முகாமிட்டு, அங்கு வருபவர்களுக்கு உடல்நலப் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த முகாம் தொடங்கிய முதல் இரண்டு நாட்களில் 147 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 144 பேரிடம் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

மதுப்பழக்கத்தால் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வைட்டமின் பி1 மற்றும் மல்டிவைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. தேவைப்படுபவர்களுக்கு குளுக்கோசும் அளிக்கப்படுகிறது.இந்தத் திட்டம் குறித்து கலெக்டர் திலீப் குமார் யாதவ் கூறுகையில், மதுவிற்பனையைத் தடுப்பதோ அல்லது மது அருந்துபவர்களை கட்டாயப்படுத்துவதோ அரசின் நோக்கம் அல்ல. அவர்களின் உடல்நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, விருப்பத்தின் அடிப்படையில் மதுப்பழக்கத்தைக் கைவிட ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.

மதுக்கடைகளுக்கு வெளியே மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த வித்தியாசமான சுகாதார முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

maha

Next Post

116 நாட்களாக நடவடிக்கை இல்லை... கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரும் உதயநிதி!

Thu Nov 26 , 2026
கள்ளக்குறிச்சி தொகுதி டிவிகே எம்எல்ஏ அருள் விக்னேஷ் தொடர்பான சர்ச்சையில், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் அர்லேகரை சந்தித்து மனு அளித்தார். பெண் மாவட்ட ஆட்சியருக்கு எம்எல்ஏ தரப்பில் ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டதாக எழுந்த புகார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே உதயநிதியின் கோரிக்கையாக உள்ளது. ஆளுநரிடம் நேரில் புகார் […]
Udhayanidhi 2026

You May Like