சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்களையும் விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் சனிக்கிழமை மாலை கைது செய்து சிறைபிடித்துள்ளனர். இச்சம்பவம் ராமேஸ்வரம் கடலோரப் பகுதி மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து டோக்கன் அலுவலகத்தில் முறையான அனுமதிச் சீட்டு பெற்றுக்கொண்டு, 400-க்கும் குறைவான படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.
மாலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 9 மீனவர்களையும் அவர்களின் ஒரு படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் கார்ல்மார்க்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.”முறையான அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்குச் சென்ற 9 மீனவர்களையும் படகையும் இலங்கை அரசு கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மத்திய, மாநில அரசுகள் என்ன செய்கின்றன என்றே புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், “மீனவர்கள் தங்கள் குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் மட்டுமே கடலுக்குச் செல்கிறார்கள். இது தொடர்கதையாகிவிட்டது. இதற்கு முடிவே இல்லையா? இருநாட்டு மீனவர்களையும் அழைத்து பேசி, அமைதியாக மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகளால் வழிவகை செய்ய முடியாதா? இவ்வளவு சாதனைகளைச் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணக்கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.
மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகக் குறிப்பிட்ட கார்ல்மார்க்ஸ், “மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள நாங்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை” என எச்சரித்துள்ளார்.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 7 தமிழ்நாடு மீனவர்கள், கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சென்னை விமான நிலையம் மூலம் தாயகம் திரும்பியது குறிப்பிடத்தக்கது.



