வீட்டில் ரத்த அழுத்தத்தை பரிசோதித்தபோது 157/104 mmHg என்ற அளவு வந்தால் பலருக்கும் பதற்றம் ஏற்படலாம். இந்த அளவு ஆபத்தானதா, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்க வேண்டுமா, உடனடியாக மருத்துவரை அணுக வேண்டுமா என்ற சந்தேகமும் எழலாம்.
இணையத்தில் இதே கேள்வியை ஒருவர் முன்வைத்த நிலையில், 157/104 ரத்த அழுத்தம் சரியான அளவா? என்ற கேள்விக்கு மருத்துவ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஆர்த்தி உல்லால், 157/104 mmHg என்பது உயர் ரத்த அழுத்த அளவு என விளக்குகிறார். இதில் மேலே இருக்கும் 157 என்பது சிஸ்டாலிக் அழுத்தத்தையும், கீழே இருக்கும் 104 என்பது டயஸ்டாலிக் அழுத்தத்தையும் குறிக்கிறது. இந்த இரண்டு அளவுகளுமே இயல்பைவிட அதிகமாக உள்ளன.
அதே நேரத்தில், ஒரே ஒரு முறை அதிகமாக வந்த ரத்த அழுத்த அளவை வைத்து ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக முடிவு செய்ய முடியாது. மன அழுத்தம், வலி, உடற்பயிற்சி, காபி அல்லது பிற காஃபின் பானங்கள், புகைபிடித்தல் போன்ற காரணங்களாலும் தற்காலிகமாக ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். தவறான அளவிலான BP cuff பயன்படுத்தினாலும் அளவீட்டில் மாற்றம் ஏற்படலாம்.
157/104 என்ற அளவு வந்தால் உடனடியாக பதற்றப்படாமல், சுமார் 5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து மீண்டும் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கலாம். கால்களை தரையில் வைத்து, பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. சரியான அளவிலான cuff பொருத்தப்பட்ட, நம்பகமான upper-arm BP monitor பயன்படுத்துவதும் முக்கியம்.
மீண்டும் பரிசோதித்த பிறகும் இதே அளவில் ரத்த அழுத்தம் நீடித்தால், குறிப்பாக வழக்கமாக ரத்த அழுத்தம் சீராக இருப்பவர்களுக்கு, மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். தானாகவே ரத்த அழுத்தத்தைக் குறைக்க மருந்துகளை எடுத்துக்கொள்வது சரியான அணுகுமுறை அல்ல.
ரத்த அழுத்தம் 180/120 mmHg அல்லது அதற்கு மேல் சென்றால் கூடுதல் கவனம் தேவை. சில நிமிடங்கள் அமைதியாக இருந்த பிறகு மீண்டும் பரிசோதிக்க வேண்டும். தொடர்ந்து இதே அளவு இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மேலும், அதிக ரத்த அழுத்தத்துடன் நெஞ்சுவலி, கடுமையான மூச்சுத்திணறல், தீவிரமான தலைவலி, குழப்பம், உடலின் ஒரு பக்கத்தில் பலவீனம் அல்லது உணர்வின்மை, பேசுவதில் சிரமம், பார்வையில் மாற்றம் அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அவசர மருத்துவ சிகிச்சை தேவை.
ஓய்வெடுத்த பிறகு ரத்த அழுத்தம் குறைந்துவிட்டாலும், பிரச்சினை முழுமையாக முடிந்துவிட்டது என்று கருதக்கூடாது. மன அழுத்தம் அல்லது உடல் செயல்பாடு காரணமாக ஆரம்பத்தில் அளவு அதிகரித்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற அதிக அளவுகள் தொடர்ந்து பதிவானால், வெவ்வேறு நேரங்களில் சரியான முறையில் BP-ஐ பரிசோதித்து அதன் பதிவுகளை வைத்துக்கொண்டு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.
Also Read: கூட்டுறவு அமைப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிப்பதே முக்கிய நோக்கம் – அமித்ஷா..!



