தமிழகத்தின் புதிய முதலமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று பதவியேற்றுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் தமிழிலேயே பிரதமர் மோடி பதிவு வெளியிட்டார்.
அதில், “தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்” என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட இந்த வாழ்த்து செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4 முனை போட்டி நிலவிய நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சியமைத்துள்ளார். இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் உரையாற்றிய விஜய், தமிழகத்தின் நிதிநிலை, நிர்வாக வெளிப்படைத் தன்மை மற்றும் மக்கள் நலன் குறித்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். “தமிழ்நாடு கஜானா காலியாக உள்ளது”, “வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” போன்ற அவரது கருத்துகள் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் தமிழ்ப் பதிவு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மத்திய அரசு மற்றும் புதிய தமிழக அரசு இடையிலான உறவு எப்படி அமையும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.



