விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா பேசினார். அப்போது பேசிய அவர், “தான் ரூ.4 கோடிக்கு வீடு வாங்கியதாக பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருபவர்களுக்கு பகிரங்க சவால் விடுகிறேன். அத்தகைய வீட்டின் பத்திரத்தை யார் நேரில் கொண்டு வந்து காண்பிக்கிறார்களோ, அவர்களுக்கே அந்த வீட்டை பரிசாக முழு மனதுடன் அன்பளிப்பாக வழங்குவதாக தெரிவித்தார்.
தாங்கள் தீவிரமாக மக்கள் பணியாற்றுவதற்காக அரசியல் களத்திற்கு வந்துள்ளதாகவும், களத்தில் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியாதவர்கள் இதுபோன்ற மலிவான அவதூறுகளை பரப்புவது எரிச்சலையும், வேதனையையும் ஏற்படுத்துவதாகவும் கூறினார். எதிர்க்கட்சியினர் எத்தகைய திட்டமிட்ட பொய்களை அவிழ்த்துவிட்டாலும், யார் நல்லது செய்கிறார்கள், யார் கெட்டது செய்கிறார்கள் என்பதை மக்கள், தெளிவாகப் புரிந்து வைத்துள்ளதாக கூறினார்.
வதந்திகளாலும், அறியாமையாலும் குழப்பத்தில் உள்ள பொதுமக்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு தவெக மகளிருக்கு உள்ளது. அந்த மிக முக்கியமான கடமையை முதல்வர் விஜய் மகளிர் கைகளில் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.



