ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாகவும், பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமான பாலிவுட் நடிகர் நானா படேகர், 75 வயதில் காலமானதாக வெளியாகியுள்ள செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர், இயக்குநர், எழுத்தாளர், நாடகக் கலைஞர், ஓவியர் எனப் பன்முகத் திறமை கொண்ட இவர், தனது நடிப்பிற்காக மூன்று தேசிய திரைப்பட விருதுகளையும், 2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.
கோவாவின் டோனா பவுலா பகுதியில் உள்ள தனது வீட்டில் நானா படேகர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவருக்கு 45 நிமிடங்களுக்கும் மேலாக சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனளிக்கவில்லை என்றும், மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.
இந்தி திரையுலகில் தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்த நானா படேகர், திரைப்படங்களைத் தாண்டியும் சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். மகாராஷ்டிராவில் வறுமையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் நாம் அறக்கட்டளையை நடத்தி வந்தார். அவரது மறைவுச் செய்தி ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: 73% காட்டு விலங்குகள் அழிவு!. பேரிடரின் விளிம்பில் பூமி!. WWF வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை!



