துரோகத்துக்கு கிடைத்த இடைக்கால வெற்றி! அதிகார பலம்.. ஜி-பேவில் பணம்! தவெக வெற்றியை விளாசிய ஸ்டாலின்!

Stalin Vijay 2026

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு கிடைத்திருப்பது துரோகத்திற்கான இடைக்கால வெற்றியே தவிர வேறொன்றுமில்லை; குறுகிய காலத்திலேயே கட்டமைக்கப்பட்ட தவெகவின் பொய் பிம்ப அரசியல் வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


சட்டமன்றப் பொதுத்தேர்தல் முடிந்து 5 மாதங்களுக்குள் இரு சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரம் மூலம் ஆளுங்கட்சி தங்கள் பக்கம் இழுத்து ஜனநாயகப் படுகொலை செய்து, மக்களின் மீது இடைத்தேர்தலைத் திணித்ததாக அவர் குற்றம்சாட்டினார். தேர்தல் களத்தில் அதிகார பலம், பணபலம் மற்றும் காவல்துறை செல்வாக்கு ஆகியவற்றை முழுமையாக தவறாக பயன்படுத்தியே ஆளுங்கட்சி இந்த வெற்றியைப் பெற்றுள்ளதாக அவர் சாடியுள்ளார்.

“பெரும்பான்மை இல்லாத சூழலில் குதிரை பேரங்கள் மூலமாக ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர், ரீல்ஸ் காட்சிகளை மட்டுமே நம்பித் தேர்தல் களத்தை எதிர்கொண்டார். டீ குடிப்பது, டிராக்டர் ஓட்டுவது, முருங்கைக்காய் பறிப்பது போன்ற விளம்பர உத்திகளை கையாண்டு தெருத்தெருவாக பிரச்சாரம் செய்தும், மக்கள் அவரை வெயிலில் அலையவிட்டே பதிலடி கொடுத்துள்ளனர்; தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் மகளிர் கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் உள்ளிட்ட நலத்திட்டங்களை அறிவித்து தேர்தல் நடத்தை விதிகளை ஆளுங்கட்சி காற்றில் பறக்கவிட்டது” என்று குறிப்பிட்டார்.

மேலும், வாக்காளர்களுக்கு கூகுள் பே வாயிலாகப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது மற்றும் அமைச்சரவையே 3 வார காலம் இரு தொகுதிகளிலேயே முடங்கிக் கிடந்தது ஆகியவை தேர்தல் களத்தில் தவெக-வின் பதற்றத்தையே வெளிப்படுத்தியதாக தெரிவித்தார்.

அரசு ஊழியர்கள் மிரட்டப்பட்டது, வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டது உள்ளிட்ட பல்வேறு அதிகார துஷ்பிரயோகங்களை ஆளுங்கட்சி அரங்கேற்றியதாகக் குறிப்பிட்ட அவர், 5 நிமிடப் பேச்சில் அனைத்தையும் மாற்றிவிடுவார் என விஜய் மீது கட்டமைக்கப்பட்ட மாயை நான்கே மாதங்களில் சுக்குநூறாக உடைந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், “இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக களம் கண்ட அனைத்துக் கட்சிகளும் பெற்ற வாக்குகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அதுவே பெரும்பான்மை வாக்குகள்; மக்கள் தவெக அரசை நிராகரித்துள்ளனர் என்பதுதான் கள யதார்த்தம்” என்று குறிப்பிட்ட ஸ்டாலின், சினிமா கவர்ச்சியை மூலதனமாக கொண்டு கார்ப்பரேட் சக்திகளின் கைபாவையாக செயல்படும் தவெக அரசின் முகத்திரையைக் கிழிக்கும் மக்கள் பரப்புரையை திமுக தொய்வின்றித் தொடர்ந்து முன்னெடுக்கும் என்றும், களத்தில் அஞ்சாமல் நின்று போராடிய கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் உடன்பிறப்புகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

Read More : BREAKING | தமிழகம் ஊழல்வாதிகளின் கோட்டை இல்லை! பணநாயக சூத்திரத்தை அடித்து நொறுக்கிய தேர்தல்! வெற்றிக்கு பின் கர்ஜித்த முதல்வர் விஜய்!

Next Post

மக்கள் தீர்ப்பல்ல; அதிகாரப் படுகொலை! ரீல்ஸ் ஆட்சியில் மயங்கி விழுந்த ஓட்டுகள்! முதல்வர் விஜயை கடுமையாக சாடிய இபிஎஸ்!

Fri Oct 9 , 2026
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது: “தவெகவின் இந்த வெற்றி என்பது பண பலத்திற்கும், அதிகார பலத்திற்கும் கிடைத்த அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையே தவிர மக்கள் அளித்த தீர்ப்பல்ல” என்று சாடியுள்ளார். தோல்வி பயம் காரணமாக ஒட்டுமொத்த அமைச்சரவையையும் களத்தில் இறக்கி, வாக்காளர்களுக்கு நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியும், அதிமுக நிர்வாகிகள் மீது […]
eps cm vijay

You May Like