நாட்டில் தற்போது அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை நிலவுவதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க போராடும் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து ஒடுக்கி வருவதாக தனது எக்ஸ் தள பதிவில் மிக காட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுத்த காரணத்திற்காக முன்னாள் முதல்வர்களான பினராயி விஜயன், அரவிந்த் கேஜரிவால், மமதா பானர்ஜி, மாணிக் சர்க்கார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்ட மூத்த தலைவர்களையும், பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் ஒன்றிய பாஜக அரசு சட்டவிரோதமாக தடுப்பு காவலில் அடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளையில், தேசத்துரோக செயல்களுக்காக நீதிமன்ற கூண்டில் நின்று விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், Z+ சிறப்பு பாதுகாப்புடன் அதிகார திமிரில் சுதந்திரமாக உலா வருவது நாட்டின் மிகப்பெரிய வெட்கக்கேடு என அவர் சாடியுள்ளார்.
மேலும், வாக்காளர் விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட SIR திட்டத்திற்கு பின்னணியில் இருக்கும் சதிகள் அனைத்தும் தற்போது மக்களிடையே முழுமையாக அம்பலமாகிவிட்டதாக குறிப்பிட்ட அவர், தலைநகர் டெல்லியை பூட்டி வைப்பதாலோ, இணைய சேவைகளை துண்டிப்பதாலோ, அரசியல் தலைவர்களை சிறைப்படுத்துவதாலோ இந்திய இளைஞர்களின் எழுச்சியை ஒன்றிய அரசால் ஒருபோதும் அடக்கிவிட முடியாது என்று எச்சரித்துள்ளார். ஒட்டுமொத்த தேசத்தையும் எத்தனை நாட்களுக்குத்தான் ஒன்றிய பாஜக அரசு இப்படி முடக்கி வைத்திருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளையில், தமிழகத்தை ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள மூடர்கூட தவெக அரசு தனது டெல்லி எஜமானர்களை திருப்திப்படுத்த துடிக்கிறது” என்று கடுமையாக சாடியுள்ளார். SIR திட்டத்திற்கு எதிராகவும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் பதவி விலகலை வலியுறுத்தியும் அறவழியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் தோழர் சண்முகம் மற்றும் ஜனநாயக செயற்பாட்டாளர்களை தமிழக காவல்துறை தடுப்பு காவலில் வைத்திருப்பது கண்டனத்திற்குரியது என்றார்.
உடனடியாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டு SIR திட்டம் முழுமையாக கைவிடப்பட வேண்டும் என்றும், இந்திய மக்களுக்கு துரோகம் இழைத்த அனைவரும் பாரபட்சமின்றி உரிய சட்ட விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Read More : மாணவர்களின் பணத்தை சுரண்டுவதற்கு பதில் பிச்சை எடுக்கலாம்! அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கிய கோர்ட்!



