ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டில் இளைஞர்களின் உயிரைக் குடிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து நாளையுடன் ஓராண்டு நிறைவடைகிறது. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு 27 உயிர்கள் பலியான பிறகும் அதை தடை செய்யும் விஷயத்தில் தமிழக அரசு துணிச்சலாக செயல்படத் தயங்குவது ஏமாற்றமளிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தீமைக்கு எதிராக கடந்த 6 ஆண்டுகளாக ராமதாஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து, முந்தைய அதிமுக ஆட்சியில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது.
ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி ராமதாஸ் அய்யா வலியுறுத்தினார். அடுத்த அரை மணி நேரத்தில், புதிய தடை சட்டம் இயற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருப்பதாக சட்ட அமைச்சர் ரகுபதி அறிவித்தார். ஆனால், அதன் பின் ஓராண்டு கடந்து விட்டது. இன்று வரை ஆன்லைன் சூதாட்டம் தமிழ்நாட்டில் தடை செய்யப்படவில்லை. மாறாக, கடந்த ஓராண்டில் கொலைகள், தற்கொலைகள் என 27 அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன. 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தலைவரை இழந்து நடுத்தெருவுக்கு வந்துள்ளன.
ஆன்லைன் சூதாட்டத்தால் 27 உயிர்கள் பலியானதற்கு, இந்த விஷயத்தில் தமிழக அரசு கடைபிடித்து வரும் தடுமாற்றமான நிலைப்பாடு தான் காரணம். ஆன்லைன் சூதாட்டம் பெருங்கேடு என்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்பதை முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் தமிழக அரசு அதன் நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பதற்கான விலை தான் 27 உயிர்கள். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியது என்பதை தமிழக அரசும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது; ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டும் என்று வல்லுனர் குழுவும் பரிந்துரைத்திருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிரகடனம் செய்வதில் தமிழக அரசுக்கு என்ன தயக்கம்? ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படாததால் கடந்த ஓராண்டில் மட்டும் 27 தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இது ஈடு செய்ய முடியாத விலை”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.