மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதியின் சுல்தான் பத்தேரி நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் புதிய கட்டடத்தை ராகுல் காந்தி திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், ”இந்தியாவில் ஏழைகள் தான் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் சென்ற போது கிடைத்த அனுபவத்தில் இருந்து இந்த பிரச்சனையை நான் முழுமையாகத் தெரிந்து கொண்டேன்.
சிறந்த மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெறும் அளவுக்கு ஏழை மக்களிடம் பணம் இல்லை. நமது நாட்டில் பணம் இருந்தால்தான் நல்ல மருத்துவ வசதி கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. வசதி இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது. ஏழைகளுக்கு புற்றுநோய், இதய நோய் போன்ற பெரிய நோய்கள் வந்தால் அவர்கள் சிறந்த மருத்துவ வசதியைப் பெற முடியாமல் உயிரிழக்க நேரிடுகிறது.
காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தானில் மாநில அரசு சார்பில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். நமது நாட்டில் பல்வேறு மருத்துவமனைகள் வர்த்தகமயமாகி, லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. இந்தப் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகும்” என்றார்.