முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலாகவும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளருமாக இருந்தவர் சந்திரசேகர். அண்மைக்காலமாக இருவருக்குமிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்தன. முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது வருத்தத்தில் இருந்தார் சந்திரசேகர். இந்த நிலையில் தான் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.
கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாநில இணை செயலாளராக இருந்தார். அதிமுக ஆட்சி காலத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நெருங்கிய நண்பர் மற்றும் வலதுகரமாக கட்சியினரால் அறியப்பட்டவர். மேலும் அதிகாரமிக்கவராக வலம் வந்தார். கட்சியினர் மட்டுமின்றி, அரசு அதிகாரிகளும் அவரது இல்லத்துக்குச் சென்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் தான் கடந்த, 2021 சட்டசபை தேர்தலில், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். தெற்கு தொகுதியை பாஜக-வுக்கு ஒதுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனனுக்கு வடக்கு தொகுதி வழங்கப்பட்டது. அதனால், உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவியை போட்டியிடச் செய்து, மேயராக்க திட்டமிட்டனர். அதன்படி, அவரது மனைவியும், 38வது வார்டில் போட்டியிட்டு, கவுன்சிலரானார். அத்தேர்தலில் மூன்று வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றதால் மேயராக முடியவில்லை.
கடந்த, 2022ல் வேலுமணி வீடு மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை செய்தபோது, சந்திரசேகரும் சிக்கினார். அவரது வீட்டில் ஒன்பது மணி நேரம் சோதனை நடந்தது. ஆவணங்கள், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை போலீசார் கைப்பற்றிச் சென்றனர். அச்சம்பவத்துக்கு பின், கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் திமுக-வுக்கு இழுப்பதற்கான முயற்சிகள் சில மாதங்களாக மறைமுகமாக நடந்து வந்தது. இதற்கிடையே, தனிப்பட்ட காரணங்களுக்காக, கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக, சந்திரசேகர் நேற்றிரவு அறிக்கை வெளியிட்டார்.