சிக்கன் சாப்பிட்ட தந்தை, 4 வயது மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பெரியபொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கௌதம் ஆனந்த் (33). இவருக்கு பவித்ரா என்ற மனைவியும், மிதுஸ்ரீ என்ற 4 வயது பெண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், வீட்டில் சமைத்த சிக்கனை கௌதம் மற்றும் அவரது மகள் ஆகிய இருவரும் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சற்று நேரத்தில் சிறுமி மயக்கம் அடைந்துள்ளார்.
இதையடுத்து அவரை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள் இறந்த அதிர்ச்சியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, சற்று நேரத்தில் கௌதமும் உயிரிழந்தார்.
இதையடுத்து, மனைவி பவித்ரா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், தினமும் மது அருந்திவிட்டு அசைவ உணவு உட்கொள்வது வழக்கம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று அதிகமாக மாமிசம் சாப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கௌதம் ஆனந்த் மற்றும் அவரது மகளின் உடற்கூராய்வு நடைபெற்று, அதன்பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.