கடலூர் அருகேயுள்ள பாலூர் நடுக்காலனியை சேர்ந்தவர் 26 வயதான வினோத்குமார். இவர் நத்தம்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இருந்த நட்பு காதலாக மாறியுள்ளது. இருவரும் தன்பாலின காதலர்களாக வலம் வந்த நிலையில், திடீரென ‘நீ பெண்ணாக மாற வேண்டும்’ என அந்த இளைஞர் வினோத்குமாரை வற்புறுத்தியுள்ளார். மேலும், நீ பெண்ணாக மாறினால் தான் மற்றவர்களை போல நாம் கணவன் மனைவியாக வாழ முடியும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
இளைஞரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய வினோத்குமார், கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு, அறுவை சிகிச்சை செய்து திருநங்கையாக மாறியுள்ளார். மேலும், தனது பெயரை வினோதினி என மாற்றியுள்ளார். இதையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டு, ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்களை திடீரென, இளைஞரின் குடும்பத்தார் பிரித்துள்ளனர். மேலும், இளைஞருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த வினோதினி, ஊர் பஞ்சாயத்து மூலம் இளைஞரின் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மேலும், தங்களை சேர்த்து வைக்குமாறு முறையிட்டுள்ளார். இதனை அறிந்த இளைஞரின் வீட்டார், வினோதினியை தகாத வார்த்தைகளில் திட்டி தாக்கியுள்ளனர். இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து, உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனை போலீசார் தடுக்க முயன்ற போது, அவர் மண்ணெண்ணெயை குடித்துள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து விசாரித்து வருகின்றனர்.