Indore: மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருப்பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 3வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 49 ஓவர்களில் சேஸிங் செய்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதனால் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணி வெற்றிபெற்றதை கொண்டாடும் வகையில் மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் இளம் கிரிக்கெட் ஆர்வலர்களால் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், திடீரென இரு குழுவினரிடையே மோதல்கள் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் மோதல் முற்றி வன்முறையாக மாறியது. அதாவது, ஜமா மசூதி பகுதியை நெருங்கும் போது, பேரணியில் பங்கேற்றவர்கள் மீது ஒரு கும்பல் கற்களை வீசத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், நகரத்தின் பல பகுதிகளில் கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கடைகளை சூறையாடி, வாகனங்களை சேதப்படுத்தி, மேலும் சிலவற்றிற்கு தீ வைத்துள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மேலும் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுவதால் அங்கு துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இந்தூர் ஆட்சியர் ஆஷிஷ் சிங் தெரிவித்தார்.
Readmore: 2025 சாம்பியன்ஸ் டிராபியை தட்டித்தூக்கிய இந்திய அணி!. பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?.