நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ஆம் ஆண்டு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாய் வெடித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வளசரவாக்கம் காவல் நிலையத்தில், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி சீமான் தன்னை ஏமாற்றியதாகவும், 6 முறை கருக்கலைப்பு செய்ததாகவும் விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 12 வாரங்களில் வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். சீமானின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் நாகரத்தினா, சதீஷ் சந்திர சர்மா இன்று விசாரித்தனர்.
2 மாதங்களுக்குள் சீமான், நடிகை தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்க வேண்டும். சீமான் மீது விசாரணை நடத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வழக்கின் விசாரணை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. சீமானின் மேல்முறையீட்டு மனு மீது தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிபதி தரப்பில்,” சீமான் வழக்கில் எதிர்மனுதாரர் தங்களின் தரப்பு விளக்கம் என்ன என்பதற்கு பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும். இரு தரப்புக்கு இடையே நீதிமன்றத்துக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எனவே, எதிர்மனுதாரர் பதிலளித்தப் பிறகு இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்தப் பிறகே காவல்துறை சீமானை விசாரிக்க வேண்டும். அதுவரை இந்த விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது” என உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து நடிகையை தொடர்புபடுத்தி சீமான் குறித்து அவதூறு பரப்பிய சமூக ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர நாதக முடிவு செய்துள்ளது.