எல்லை இல்லா குற்றங்களை தடுக்க ‘ஒரே நாடு, ஒரே போலீஸ் சீருடை’ என்ற யோசனையை பிரதமர் மோடி முன்வைத்துள்ளார்.
ஹரியானா மாநிலம் சூரஜ்கண்டில் நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் 2-வது நாள் மாநாடு நடைபெற்றது. இதில், காணொளி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு என கூறினார். இந்நிகழ்வில் அவர் பேசியதாவது, ”மாநிலங்களுக்கு இடையே சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் இணைந்து செயலாற்ற வேண்டும். உளவுத்துறையும், காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நாட்டின் காவலர்களுக்கு ’ஒரே நாடு, ஒரே சீருடை’ என்பது சாத்தியமா? என்பதை நாம் யோசிக்க வேண்டும்.
இதை நான் உங்கள் மீது திணிக்க விரும்பவில்லை. இந்த யோசனை 5 ஆண்டுகளிலோ, 50 ஆண்டுகளிலோ, 100 ஆண்டுகளிலோ எப்போது வேண்டுமானாலும் சாத்தியமாகலாம். ஆனால், இந்த யோசனை பற்றி சிந்திக்க வேண்டும் என்றே கூறுகிறேன். நாட்டிற்கு எதிரான சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது மிக முக்கியம். ஒரே போலி செய்திகூட நாட்டில் புயலை உருவாக்கிவிடலாம். எனவே, மக்களுக்கு ஒரு செய்தியை பார்த்ததும் அப்படியே நம்பி பார்வர்டு செய்வதற்கு முன்பு. அது உண்மை தானா என்பதை சிந்தித்து பார்க்க நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
போலி செய்திகளை கண்டறிவதில் தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்காற்றும். எனவே, சட்டம்-ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் நவீன தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையில்லாத பழைய சட்டங்களை நீக்கி காலத்திற்கு ஏற்ற சட்டங்களை கொண்டுவருவதில் மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும். காவல்துறையில் தொடர் சீர்திருத்தங்கள் தேவை”. இவ்வாறு அவர் பேசினார்.